நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 533.35 கோடியில் 44 திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: அரசு அறிவிப்பு

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  533.35 கோடி மதிப்பீட்டிலான 44 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் 1037 பேருக்கு கருணை  அடிப்படையில் பணிநியமன ஆணை மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய 2  முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹25 லட்சம்  கொரோனா  நிவாரண உதவித்தொகை வழங்கினார்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

நகராட்சி  நிர்வாகத் துறை சார்பில் மதுரை மாநகராட்சியில் ₹55 கோடி மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட பெரியார் பேருந்து நிலையம், திருச்சி  மாநகராட்சியில் ₹18 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட  உய்யகொண்டான் ஆற்றின் முகப்பு, தஞ்சாவூர் மாநகராட்சியில் ₹15 கோடியே 49  லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம்,  திருவையாறு பேருந்து நிலையத்தில் ₹14 கோடியே 44 லட்சம்  மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம், நெல்லை  மாநகராட்சியில் ₹13 கோடியே 20 லட்சம்  மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட  எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், நெல்லை  மாநகராட்சியில் ₹13 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட  பாளையங்கோட்டை பேருந்து நிலையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியத்தின் சார்பில் பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ₹241 கோடி  மதிப்பீட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் மற்றும்  மூப்பேரிபாளையம் பேரூராட்சிகள், சூலூர் விமானப்படை தளம், திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள அவிநாசி பேரூராட்சி ஆகியவற்றிற்கு குடிநீர் வழங்குதல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாகொண்டபள்ளி மற்றும்  27 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் என மொத்தம் ₹533  கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டங்களை முதல்வர் திறந்து  வைத்தார்.மேலும், கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கணேசன்  மற்றும் மின்னியலாளர்  பாலாஜியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின்  பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா நிவாரண உதவித்தொகையாக தலா ₹25 லட்சம்   காசோலைகளை வழங்கினார்.

பேரூராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில்  உயிரிழந்த 37 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மாநகராட்சிகள் மற்றும்  நகராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 1000 பணியாளர்களின்  வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கு  பணி நியமன ஆணைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன்,  கே.என்.நேரு, எ.வ.வேலு,  தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், பி.மூர்த்தி,  பழனிவேல் தியாகராஜன், மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், தலைமைச்  செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  செயலாளர்  சிவ் தாஸ் மீனா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்  கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், பேரூராட்சிகளின்  ஆணையர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை  இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா மற்றும்  உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More