சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் 2வது முறை சோதனை

திருப்போரூர்: சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் பிரபல டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுஹில்ஹரி பன்னாட்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த மாணவிகளுக்கு சாமியார் சிவசங்கர் பாபா, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் வந்தன. இதையடுத்து, டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அப்போது, பல்வேறு மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 5 போக்சோ வழக்குகள் பதிவானது.

தொடர்ந்து, கடந்த நவம்பர் 29ம் தேதி சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் போலீசார் சுசில்ஹரி பள்ளி, ராமராஜ்யம் ஆசிரமம், சிவசங்கர் பாபாவுக்கு உதவியாக இருந்தவர்களின் குடியிருப்புகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், சிலரது வீடுகள் பூட்டப்பட்டு இருந்ததால், அவர்களின் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு திரும்பினர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார், நேற்று 2ம் கட்ட சோதனையை நடத்தினர். இதில் காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை அறைகளை திறந்து சோதனையிட்டனர்.  திறக்க முடியாத சில ராக்குகள் கார்பென்டரை வரவழைத்து, அதனை உடைத்து திறக்கப்பட்டன. அதில் முக்கிய ஆவணங்கள், பெண் டிரைவ், ஹர்டுடிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றினர்.

Related Stories: