கல் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு மாணவனுக்கு திருக்குறள் புத்தகம்

ஆவடி: ஆவடியில் இருந்து பட்டாபிராம் சிரஞ்சீவி நகருக்கு (தடம் எண்.எஸ்.48) என்ற மினிபேருந்து சென்று கொண்டிருந்தது. திருநின்றவூர் ஜெயரம் நகரை சேர்ந்த வெங்கடேசன் (52) என்ற டிரைவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்து ஆவடி பணிமனைக்கு சொந்தமானது. இதில் 25க்கும் மேற்பட்டோர் வந்தனர். இந்த பேருந்து பட்டாபிராம் அண்ணாநகர் மெயின் ரோட்டில் அரசு மேல் நிலைப்பள்ளி வழியாக சென்று கொண்டிருந்தது. சாலை ஓரமாக நடந்து வந்த பிளஸ்2 மாணவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்தபடியும் விளையாடிக் கொண்டும் வந்தனர்.

பின்னர் திடீரென்று அதில் ஒரு மாணவன் கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது வீசியுள்ளான். இதில் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து கீழேவிழுந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். பட்டாபிராம் காவல் நிலையத்துக்கு கல்வீசி தாக்குதல் நடத்திய மாணவனை அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் லாரன்ஸ் தலைமையில் போலீசார் பேருந்தை ஆய்வு செய்தார். டிரைவர் வெங்கடேஷன் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் பிளஸ் 2 மாணவர் பட்டாபிராம் நெமிலிச்சேரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பஸ் கண்ணாடி உடைத்ததற்கு அவரும் அவரது தந்தையும் போலீசார், பஸ் டிரைவரிடம் மன்னிப்புக் கேட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் லாரன்ஸ் மாணவனை 10 திருக்குறள் எழுதித்தரும்படி கூறினார். மாணவனும் எழுதிக்கொடுத்தார். மேலும் போலீசார் மாணவனுக்கு திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்ட புத்தகங்களை வழங்கி அறிவுரை கூறினர். அதோடு மட்டுமன்றி தினமும் பள்ளிப்படங்கள் எழுதி 10 நாட்களுக்கு எழுதி கொண்டுவந்து காவல் நிலையத்தில் காண்பிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.  

Related Stories: