சென்னையில் பழுதாகியுள்ள வானிலை ஆய்வு ரேடாரை சீரமைப்பதில் ஏன் தாமதம்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி

புதுடெல்லி: சென்னையில் பழுதாகி உள்ள வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க ஒன்றிய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். மழை, வானிலையை கண்காணிக்க சென்னையில் 4 ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 முக்கிய ரேடார்கள் செயலிழந்து விட்டதாக, சமீபத்தில் வடகிழக்கு பருவமழையின் போது சில தகவல்கள் வெளியாகின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவை செயல் இழந்து விட்டதால், வேலை செய்யவில்லை என்ற தகவலை தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் மறுத்தார். இந்நிலையில், சென்னை துறைமுகம் நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதாகியுள்ள எஸ்-பேண்ட் டாப்ளர் ரேடாரை சீரமைக்க ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சகம் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என மக்களவையில் மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

அதன் விவரம் வருமாறு:

* சென்னை நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதாகியுள்ள எஸ்-பேண்ட் டாப்ளர் ரேடாரை சீரமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தெரியப்படுத்தவும்?

* இந்த ரேடாரை சீரமைப்பதில் புவி அறிவியல் துறை அமைச்சகம் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதையும், ஏன் இவ்வளவு கால தாமதம் என்பதையும் தெரியப்படுத்தவும்?

* தமிழ்நாடு அரசு சார்பில் 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை டேராரின் நிலை குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளனவா? எனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

* நாடெங்கிலும் நிறுவப்பட்டுள்ள ரேடார்களை பராமரிக்க அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதனையும், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பராமரிக்கப்படுகின்றன அல்லது ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன என்பதனையும் தெரியப்படுத்தவும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘‘டாப்ளர் வானிலை ரேடாரை புதுப்பிக்கும் பணி இஸ்ரோவின் ஐஎஸ்டிஆர்ஏசியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த பணியை நிறைவு செய்யும் பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இந்த ரேடார் 20 ஆண்டுகள் பழமையானது என்பதால் அதன் பாகங்கள் வெளிச்சந்தையில் கிடைப்பதில்லை என்பதால் சிக்கலான அந்த பணி இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2014 முதல் 2020ம் ஆண்டு வரை எஸ் பேண்ட் ரேடார் நிலை தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து எந்த பரிந்துரையும் கோரிக்கையும் வரவில்லை. சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த சமயங்களில் ரேடார் அணைத்து வைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான தொழில்நுட்ப குழுவினர் நிபுணர்கள் தலைமையில் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்’’ என கூறி உள்ளார்.

* பிஎஸ்என்எல்லை புறக்கணித்து தனியாரை ஊக்குவிப்பதா?

மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய தயாநிதிமாறன் எம்பி, ‘‘முந்தைய தொலைதொடர்பு துறை அமைச்சர் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-க்கு 4ஜி மற்றும் 5ஜி சேவை தரப்படும் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரையிலும் 4ஜி சேவை தருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இதன் காரணமாக, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எஸ் தனது வாடிக்கையாளர்களை ஜியோவிடம் இழந்து வருகிறது. தனியார் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஆதரவு தருவது மட்டுமின்றி, பிரதமர் மோடியே அதற்கு விளம்பர தூதராக விளம்பரங்களில் இடம் பெற்று வருகிறார்,’’ என்றார். இதற்கு பாஜ எம்பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: