பாப்புலர் பிரண்ட், எஸ்டிபிஐ தலைவர்கள் வீடுகளில் சோதனை ஒன்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மலப்புரத்தில் பதற்றம்: போலீஸ் குவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில்  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி தலைவர்கள் வீடுகளில் நேற்று சோதனை நடத்திய, ஒன்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கலவரம் ஏற்பட்டது. இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகின. இந்த அமைப்புகளுக்கு  வெளிநாட்டில் இருந்து பெருமளவு நிதி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி தலைவர்கள் வீட்டில் ஒன்றிய அமலாக்க துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த  வகையில் கேரளாவில் நேற்று காலை மலப்புரம், கண்ணூர், மூவாற்றுபுழா மற்றும் இடுக்கி ஆகிய இடங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா மற்றும்  எஸ்டிபிஐ கட்சி தலைவர்கள் வீட்டில் மும்பையை சேர்ந்த ஒன்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதனை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சமயத்தில் மலப்புரம், பெரும்படப்பில் எஸ்டிபிஐ நிர்வாகி  வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த  எஸ்டிபிஐ தொண்டர்கள் அதிகாரிகளை திடீரென தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மலப்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: