தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடர் இந்திய அணி அறிவிப்பு: ரோகித்துக்கு புதிய பொறுப்பு

புதுடெல்லி: தென் ஆப்ரிக்க அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் ரகானேவுக்கு பதிலாக துணை கேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோகித் ஷர்மா, ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராத் கோஹ்லி தலைமையிலான அணியில் மொத்தம் 18 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ரகானேவிடம் இருந்த துணை கேப்டன் பொறுப்பை ரோகித் ஷர்மா ஏற்கிறார். மேலும், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோஹ்லியின் கேப்டன் பதவி முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் டிச. 26ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் ஜோக்கன்னஸ்பர்கிலும் (ஜன. 3-7), 3வது டெஸ்ட் கேப் டவுனிலும் (ஜன. 11-15) நடைபெற உள்ளன. இந்தியா டெஸ்ட் அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ரிஷப் பன்ட், விரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்கள்), கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ஆர்.அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.

Related Stories:

More