சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குப்பை அகற்றவில்லை என்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குப்பை தொட்டிகளில் இருந்து குப்பைகளை அகற்றவில்லை என்றால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வௌியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34,640 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் உள்ள குப்பை தொட்டிகளில் இருந்து நாள்தோறும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சென்னை மாநகராட்சி மூலம் நேரடியாகவும், திருவொற்றியூர், மணலி மற்றும் மாதவரம் ஆகிய மண்டலங்களில் சென்னை என்விரோ என்ற தனியார் நிறுவனம் மூலமும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் சுமித் உர்பேசர் என்ற தனியார் நிறுவனம் மூலமும் திடக்கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

15 மண்டலங்களில் தினசரி உருவாகும் குப்பையினை சேகரிக்க 14,216 காம்பாக்டர் குப்பை தொட்டிகளும், அவற்றை அகற்ற 261 காம்பேக்டர் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. தற்போது அகற்றும் காம்பேக்டர் வாகனங்களில் இயக்க நேரம், வாகனங்கள் குப்பை தொட்டிகளில் இருந்து குப்பை அகற்றும் இடங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் https://chennaicorporation.gov.in/gcc/swm_bin என்ற சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கும் தூய்மை பணிகளில் ஈடுபடும் காம்பேக்டர் வாகனங்கள் இணையதள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் குப்பை தொட்டிகளில் இருந்து குப்பையை அகற்றவில்லை எனில் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: