உத்தர பிரதேசத்தில் பெண்களுக்காக காங். தனி தேர்தல் வாக்குறுதி: மாணவிகளுக்கு இலவச போன், ஸ்கூட்டர்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்களுக்காக காங்கிரஸ் தனியாக தேர்தல் வாக்குறுதி புத்தகத்தை பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க, பாஜ முயற்சி மேற்கொண்டுள்ளது. அதே நேரம், காங்கிரசும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், இம்மாநில பெண்களுக்காக காங்கிரஸ் தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதை வெளியிட்டு, லக்னோவில் பிரியங்கா காந்தி பேசியதாவது: பெண்களுக்கு சம உரிமை, மதிப்பு அளிக்கப்படும் போதுதான் பெண்களுக்கு அதிகாரமளித்தல் சாத்தியமாகிறது. பெண்களுக்கு சம உரிமை, மதிப்பு அளிக்க காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது. இதனால்தான், சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீத சீட்களை ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ் தான் முதல் பெண் பிரதமர், முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபளானி ஆகியோரை நாட்டிற்கு அளித்தது. உத்தர பிரதேச மாணவிகளுக்கு கல்வி எளிதில் கிடைக்க கூடிய வகையில் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளன. காங்கிரசின் கொள்கைகள் மட்டுமே பெண்களுக்கு அதிகாரம் அளிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

* யோகிக்கு தெரியுமா?

உபி.யில் மீண்டும் பாஜ ஆட்சி அமைந்தால், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கோயிலுக்கு வெளியே கரசேவை செய்து கொண்டிருப்பார்கள் என்று முதல்வர் யோகி கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரியங்கா, ``கோயிலுக்கு செல்ல தொடங்கியதில் இருந்து நான் எந்த கோயிலுக்கு போகிறேன் என்பது யோகிக்கு தெரியுமா? எனது 14 வயதில் இருந்து விரதம் இருப்பதை அறிவாரா? அவருக்கு வேறு என்ன தெரியும்? எனது மதம், நம்பிக்கை குறித்து அவர் சான்று அளிப்பாரா? அந்த சான்று எனக்கு தேவையில்லை,’’ என்றார்.

Related Stories: