ஒரே நாளில் திருமணம்... ஒரே நாளில் பிரசவம்: கேரளாவில் அபூர்வ இரட்டை சகோதரிகள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே தலயோலபரம்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் நாயர். அவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளுக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்று பெயரிட்டனர். 2 பேரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர். 2 பேருக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணம் நடக்க வேண்டும் என்று இரட்டை சகோதரிகள் ஆசைப்பட்டனர். அவர்கள் நினைத்தபடியே கடந்த வருடம் டிசம்பர் 11ம் தேதி, கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் நடந்தது. ஸ்ரீபிரியாவின் கணவர் வினூப் கொல்லத்தை சேர்ந்தவர். ஸ்ரீலெட்சுமியின் கணவர் ஆகாஷ் நாத். திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.

திருமணத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல் பிரிந்து, 2 பேரும் அவரவர் கணவர்களின் வீடுகளுக்கு சென்றனர். இந்த நிலையில் முதலில் ஸ்ரீபிரியா கர்ப்பம் அடைந்தார். அடுத்த ஒரு சில தினங்களிலேயே ஸ்ரீலெட்சுமியும் கர்ப்பிணியானார். இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் பெற்றோர் வீட்டிற்கு பிரசவத்திற்கு வந்தனர். 2 பேரும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் நேற்று  முன்தினம் பிற்பகல் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மாலை  6.45 மணிக்கு ஸ்ரீலெட்சுமியும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இரட்டை சகோதரிகள் கூறியதாவது: ‘இது 2 பேருக்கும் உள்ள மன ஒற்றுமை காரணமாக நடந்திருக்கலாம். நாங்கள் இணை பிரியாது வளர்ந்தது போல, எங்கள் குழந்தைகளும் வளரட்டும்’ என்றனர்.

Related Stories: