எரியும் நெருப்புடன் குதித்த 3 பேர்.: நேரில் பார்த்த வன கிராம மக்கள் பேட்டி

குன்னூர்: முப்படை தளபதி மரணம் அடைந்த ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதி வனக்கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதுபற்றி குடிநீர்  பணியாளர் சந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் கூறுகையில், ‘‘நாங்கள் குடிநீர்  குழாய் பழுதை சரிபார்க்கும் பணி செய்து கொண்டிருந்தோம். அப்போது மரத்தின்  மேல் இருந்து பயங்கரமான வெடி சத்தம் போல் கேட்டது. அண்ணாந்து பார்த்தபோது  ஹெலிகாப்டர் வெடித்து மரத்தின் மீது மோதி தீப்பிழம்பாக கீழே விழுந்து கொண்டிருந்தது. அப்போது 3 பேர் எரியும் நெருப்புடன் கீழே குதித்தனர்.

இந்த  காட்சியை பார்த்ததும் நாங்கள் அதிர்ந்து மிரண்டுபோய் விட்டோம். இப்படி ஒரு கோர விபத்தை நாங்கள் வாழ்நாளில் நேரில் பார்த்ததேயில்லை.

ஹெலிகாப்டர் விழுந்ததும்  மேலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. பச்சை மரங்களும் தீயில் பற்றி எரிந்தது.  பெட்ரோல் சிதறியதில் தீ பரவியிருக்கலாம்.  எங்களால் ஹெலிகாப்டர்  இடிபாட்டின் அருகே செல்ல முடியவில்லை. ஏனெனில், தீ அந்தளவிற்கு எரிந்து கொண்டிருந்தது. நாங்கள் தீயணைப்பு மற்றும் அவசர உதவி ஆம்புலன்சுக்கு தகவல்  தெரிவித்தோம். அவர்கள் வந்ததும் மீட்பு பணியில் உதவி செய்தோம்’’  என்றனர்.நஞ்சப்ப சத்திரம் பகுதியை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளி  சசிகலா கூறுகையில்,‘‘நான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபோது  ஹெலிகாப்டர் விபத்தை பார்த்தேன்.  

ஹெலிகாப்டர் இங்கேயும்  அங்கேயும் தள்ளாடியபடி பறந்து வந்து மரத்தின் மீது மோதியது. நான் அதைப்பார்த்து மிரண்டு போய் விட்டேன். எங்க வீட்டின் மீது ஹெலிகாப்டர் விழுந்து  விடுமோ என்ற அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்தேன். ஐயோ எல்லாரும் வாங்க, வந்து  காப்பாத்துங்க என நான் கூச்சலிட்டேன். தீ நீண்ட நேரம் தீ எரிந்தது. எப்படி  இந்த விபத்து நடந்தது என என்னால் யூகிக்க முடியவில்லை. பனி மூட்டத்தால் விழுந்த இடம் சரியாக கண்ணுக்கு தெரியவில்லை’’ என்றார்.

ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள்

1 .முப்படை தளபதி பிபின் ராவத்,

2. அவரது மனைவி மதுலிகா

3. பிரிகேடியர் லிடர்

4. லெப்டினென்ட் கர்னல் அரிஜந்தர்சிங்

5. நாயக் குர்ஷேவக்சிங்,

6. நாயக் ஜிதேந்திரகுமார்,

7. லான்ஸ் நாயக் விவேக்குமார்,

8. லான்ஸ் நாயக் சாய் தேஜா

9. ஹவில்தார் சத்பால்.

மேற்கண்ட 9 பேரும் டெல்லியில் இருந்து கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்துக்கு தனிவிமானத்தில் வந்து, அங்கிருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளனர்.

10. ஹெலிகாப்டர் பைலட் பிரித்வி சிங் சவுகான்

11. குல்தீப்

12. பிரதீப்

13. தாஸ்

14. கேப்டன் வருண் சிங்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சக அவசர அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா ஆகியோர் பங்கேற்றனர். இதில், விபத்து குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், விபத்து தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே விளக்கினார். விபத்தில் பலியான ராவத்தின் மகள் வீட்டிற்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று பேசியது குறிப்பிடத்தக்கது.

எரிந்த இடத்தில் தடயவியல் ஆய்வு

ஹெலிகாப்டர் விபத்து மதியம் 12.10 முதல் 12.15 மணிக்குள் நடந்திருக்கலாம் என தெரிகிறது. விபத்து நடந்த இடத்தில் விமான படை பிரிவின் தடயவியல் துறை மற்றும் ஏரோநாட்டிகல் பிரிவினர் விசாரணை நடத்தினர். உதிரிபாகங்கள், சிதறிக்கிடந்த பொருட்கள் மற்றும் அந்த இடத்தை சுற்றியும் கிடந்த சிறுசிறு பொருட்களையும் சேகரித்தனர்.

நாளை இறுதி சடங்கு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் இறுதி சடங்குகள் டெல்லி கன்டோன்மென்ட்டில் நாளை நடக்கிறது. அவர்களது உடல் ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு இன்று மாலை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிபின் மற்றும் அவரது மனைவியின் உடல் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் இருவரது உடலும் தகனம் செய்யப்பட இருக்கிறது.

10 அடியில் தப்பிய வீடுகள்

ஹெலிகாப்டர் விழுந்த இடத்திற்கு அருகே 10 அடி தூர இடைவெளியில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த வீடுகள் அனைத்தும் விபத்தில் தப்பின. வீட்டில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்கள் தேயிலை பறிப்பு பணிக்காக சென்றுவிட்டனர். இதனால் விபத்து நடந்த இடத்திற்கு சென்று தீயில் எரிந்தவர்களை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. தீயணைப்பு துறை அதிகாரிகள் ராமச்சந்திரன் குழுவினர்தான் அங்கே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

200 அடிக்கு பரவிய கரும்புகை

விபத்து நடந்த இடத்தில் சுமார் 200 அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது. தீ இரண்டரை மணி நேரம் தொடர்ந்து எரிந்தது. ஹெலிகாப்டரில் ஒயிட் பெட்ரோல்  பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதன் திறன் மிகுதியாக காணப்பட்டதால் பச்சை மரங்கள் கூட வேகமாக பற்றி எரிந்துள்ளது. விபத்து நடந்த இடத்தை அந்த பகுதி மக்கள் பார்க்க ஆர்வம் காட்டினர். ஆனால், விபத்து பகுதியில் வெளி நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.  விபத்து நடந்த இடம் மிக அபாயகரமாக பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் போராட்டத்தில் கேப்டன் வருண்சிங்

ஹெலிகாப்டர் விபத்தில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருண்சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை மீட்டபோது விபத்து தொடர்பாக சில தகவல்களை கூறியதாக தகவல் வெளியானது. அவருக்குத்தான் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்ற விவரங்கள் தெரியும். அவருக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து 6 மருத்துவக்குழுவினர் குறிப்பாக பிளாஸ்டிக் சர்ஜரி குழுவினர் சென்று இவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சடலங்கள் அடையாளம் காண மரபணு சோதனை

விபத்தில் இறந்த 13 பேரின் சடலங்களும் வெலிங்டன் ராணுவ மருத்துவமனை பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. சடலங்களை பார்க்க ராணுவ அதிகாரிகளுக்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. உடல் முழுவதும் தீயில் கருகியதால் டிஎன்ஏ டெஸ்ட் (மரபணு சோதனை) எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில்தான் யார், யார் என உறுதி செய்ய முடியும். சடலங்கள் இருக்கும் வளாகத்தில் போலீசார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி சாய் தேஜ் உயிரிழப்பு

விபத்தில்  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி சாய் தேஜ் என்பவரும் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குரபாலகோட்டா மண்டலத்தில் உள்ள ஈகுவரேகடா கிராமம் இவரது சொந்த ஊர்.  சாய் தேஜ் பாதுகாப்புத் துறையில் லான்ஸ் நாயக்காக பணியாற்றி வந்தார்.  முப்படை தளபதி பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக சாய்தேஜ் செயல்பட்டு வந்தார்.  சாய்தேஜ் 2013ல் ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  சாய் தேஜ் கடைசியாக விநாயக சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சாய் தேஜ் இறந்த தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories:

More