மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது பெற்ற தமிழக மாற்றுத்திறனாளிகள் 6 பேர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

சென்னை: மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகள் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கடந்த 3ம் தேதி டெல்லி ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழா நடந்தது. இதில், சிறந்த பணியாளர், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் விருது மற்றும் சிறந்த சான்றாளர், முன்னுதாரண விருதுகளை தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.

பார்வைதிறன் குறைவுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர், சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது பெற்ற வேங்கடகிருஷ்ணன் மற்றும் ஏழுமலை, அறிவுசார் குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர், சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது பெற்ற தினேஷ், பல்வகை குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர், சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது பெற்ற மானக் ஷா தண்டபாணி, பல்வகை குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த சான்றாளர், முன்னுதாரண விருது பெற்ற ஜோதி மற்றும் பிரபாகரன் ஆகியோர் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: