10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும்: மார்ச்சில் திருப்பத்தேர்வு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு குறித்த காலத்தில் தேர்வு நடக்கும். முன்னதாக மார்ச் மாதம் திருப்பத் தேர்வுகள் நடக்கும் என்பதால் மாணவர்கள் அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.  சென்னை கோடம்பாக்கம் அரசு மேனிலைப்பள்ளியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கிய பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும். ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதம் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்தப்படும்.

பாடத்திட்டம் மற்றும் சூழல் குறித்து முடிவு செய்து தேர்வு நடக்கும் காலத்தை அறிவிப்போம். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும். மாணவர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம். பேருந்துகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது தவிர்க்க ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து சேவையை தொடங்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Related Stories: