புதுச்சேரி மாஜி அமைச்சரின் மருமகனிடம் தங்கம் வாங்கி தருவதாக 6.30 கோடி மோசடி: தந்தை, மகன் உட்பட 4 பேர் கைது

சென்னை: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மருமகன் பிரவீன் அலெக்சாண்டர் (31). இவர், நண்பரான பிரபல ஐஸ்கிரீம் டீலர் கவுதமன் (29), முந்திரி, பிஸ்தா மொத்த வியாபாரி கணேஷ்குமார் (33) ஆகியோருக்கு சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி (34), அவரது தந்தை துளசிதாஸ் (59), சூளை பகுதியை சேர்ந்த மகேஷ் (45), மாதவரத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (43) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அப்போது, கணேஷ்குமாரிடம், தான் வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், தங்கம், வெள்ளி, கார், செல்போன்கள் பில் இல்லாமல் வாங்கி தருவதாகவும் பாலாஜி தெரிவித்துள்ளார். தனது தந்தை துளசிதாஸ் ஐஏஎஸ் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், இதனால் சாஸ்திரி பவன் சுங்கவரித்துறை அதிகாரிகள் நன்றாக தெரியும் என்றும், விமான நிலையத்தில் சிக்கும் தங்கத்தை குறைந்த விலைக்கு கொடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ₹6 லட்சத்திற்கு பாலாஜி தங்கம் கொடுத்துள்ளார். அந்த தங்கத்தை பரிசோதனை செய்த போது சொக்க தங்கம் என தெரியவந்தது. உடனே, நண்பர் பிரவீன் அலெக்சாண்டரிடம் பிளாக்கில் தங்கம் வாங்குவது குறித்து கூறியுள்ளார். அவரது நண்பர்களான கணேஷ்குமார், கவுதமன் ஆகியோர் ₹6.30 கோடி பணத்தை கடந்த செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் வைத்து பாலாஜி, அவரது தந்தை துளசிதாஸ் உட்பட 4 பேரிடம் கொடுத்துள்ளனர். ஆனால், 2 மாதமாகியும் தங்கம் வாங்கி தரவில்லை. இதுதொடர்பாக, பிரவீன் அலெக்சாண்டர், கவுதமன், கணேஷ்குமார் ஆகியோர் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரிடம் நேரடியாக புகார் அளித்துள்ளனர்.

அதன்படி பெரியமேடு போலீசார் விசாரிக்க துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். போலீசார் பாலாஜி, அவரது தந்தை துளசிதாஸ், மகேஷ், ஜெயகிருஷ்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது, பாலாஜி வருமான வரித்துறையில் உயர் அதிகாரி போலவும், தந்தை துளசிதாஸ் ஐஏஎஸ் அதிகாரி என்றும் கூறி போலி அடையாள அட்டைகளை காட்டி ேமாசடியில் ஈடுபட்டதும், தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு பிரவீன் அலெக்சாண்டர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை நேரில் அழைத்து சென்று நம்ப வைத்ததும் தெரியவந்தது. சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய பாலாஜி, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளார். செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்யும் தனது தந்தை துளசிதாஸை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ₹6.30 கோடி பணத்தை பெற்றதும் தெரியவந்தது. இந்த மோசடிக்கு பாலாஜி 17 வங்கி கணக்குகளை பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து, பாலாஜி, அவரது தந்தை துளசிதாஸ், மகேஷ், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக அவர்களை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: