1978ம் ஆண்டு முதல் 2021 வரை ராணுவ சேவை சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்ற ராவத்

பல தலைமுறைகளாக தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றும் உத்தரகாண்ட்டை சேர்ந்த ராஜ்புத் வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் பிபின் ராவத். இவரது முழு பெயர் பிபின் லட்சுமண் சிங் ராவத். 1958ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பிறந்தார். பிறந்த ஊர் உத்தராகண்ட் மாநிலம் பவுரி. சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியிலும், பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் படித்தவர். தமிழகத்தில் உள்ள வெலிங்டனில் பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பங்கெடுத்துள்ளார். சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.பில்லும், மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பையும் பெற்றுள்ளார்.

ராணுவ போர்த்திறன் குறித்த தனது ஆய்வுக்காக, கடந்த 2011ம் ஆண்டு, மீரட்டிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1978ல் ராவத் முதன் முதலாக தனது ராணுவ சேவையை தொடங்கினார். 1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி நிலையத்தில் அவரது தந்தை லக்‌ஷ்மன்சிங் ராவத் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றிய படையான கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் 5வது படையணியில் சேர்ந்த இவர், டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி நிலையத்தில் ராணுவ இயக்குநரகத்தின் தலைமைஅதிகாரி உட்பட அனைத்து வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கும் பொறுப்பை வகித்தவர்.2016ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31ம் தேதியன்று, இந்திய ராணுவத்தின் 27வது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத். தலைமைத் தளபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு, துணை தலைமைத் தளபதியாகப் பணியாற்றிவந்தார். இதன்மூலம், கூர்கா படையிலிருந்து ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்ற முதல்அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். அதோடு, 2017ம் ஆண்டிலிருந்து நேபாள ராணுவத்தின் கவுரவத் தளபதியாகவும் இருந்து வருகிறார்.

இந்தியத் தரைப்படையின் 27வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய இவர் இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமைப் தளபதியாக கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி பதவி ஏற்றார். பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றபிறகு, சர்வதேச படைப்பிரிவுக்குத் தலைமையேற்று காங்கோ குடியரசில் நடைபெற்ற ஆபரேஷன்களை தலைமை ஏற்று நடத்தி உள்ளார். 2015ம் ஆண்டு ஜூன் மாதம், மணிப்பூரில் மேற்கு தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய விடுதலை முன்னணியின் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கான எதிர்வினையாக, பிபின் ராவத் தலைமையில், 21வது படைப்பிரிவின் பாராசூட் படை ராணுவ ஆபரேஷனை மேற்கொண்டது.

அவருடைய 43 ஆண்டு கால ராணுவ சேவையில், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்பட பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். 1978ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரண்டாவது லெப்டினென்ட்டாகப் பதவியேற்ற பின், லெப்டினென்ட் (1980), கேப்டன் (1984), மேஜர் (1989), லெப்டினென்ட் கலோனல் (1998), கலோனல் (2003), பிரிகேடியர் (2007), மேஜர் ஜெனரல் (2010), லெப்டினென்ட் ஜெனரல் (2014), தலைமைத் தளபதி (2017), என்று பல்வேறு பதவிகளை வகித்து 2019ம் ஆண்டு முப்படைகளுக்குமான தளபதியாகப் பதவி ஏற்றார். முப்படைத்தளபதியான பிறகு ராவத், ராணுவத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்தினார்.  உள்நாட்டு நவீனமயமாக்கலுக்கு அதிக முக்கியம் கொடுத்தார். ​​ஆயுதப் படைகள் அரசியலில் இருந்து வெகு தொலைவில் உள்ளன என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

Related Stories:

More