குன்னூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை

ஊட்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குன்னூர் வந்தார். அவர் முப்படை தலைமை தளபதி இறந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில்  ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது குறித்து  தகவல் கிடைத்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6.15 மணியளவில் தனி விமானம்  மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை வந்தார். அவருடன் அமைச்சர் கே.என்.நேரு, தமிழக  தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் வந்தனர். அவர்களை கோவை விமான நிலையத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாவட்ட கலெக்டர் ஜி.சமீரன்,  கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், கோவை  விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் 7 மணி அளவில் கோவையில் இருந்து அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக குன்னூர் புறப்பட்டார். சரியாக 9 மணி அளவில் முதல்வர், குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்தார். அங்கு ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.  இறந்தவர்களுக்கு இன்று காலை மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தவுள்ளார். முதல்வர் வருகையையொட்டி குன்னூர் பகுதியில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு,  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று குன்னூர் வரும் முப்படைகளின் தலைமை தளபதிகள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு  நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘குன்னூர் அருகே நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 வீரர்கள் மறைவுக்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பில் தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories:

More