“தாய்த்திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடு அடைகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.” - மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

நீலகிரி: தாய்த்திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடு அடைகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன் என குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறிப்பை பதிவு செய்தார். குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. விமானப்படையின் டிவிட்டர் பக்கத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணுவ பயிற்சிக் கல்லூரி மாணவர்களுடன் உரையாற்றுவதற்காக தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காயமடைந்த விமானப்படை கேப்டன் வருண் சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தார் வீரர்களுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்; குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 ஆயுதப்படை வீரர்கள் மறைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பில் தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிகிச்சையில் இருக்கும் குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை குன்னூர் சென்றடைந்தார். வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்தும், விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நீலகிரி ஆட்சியர், காவல் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆட்சியர், அதிகாரிகளுடன் முதல்வர் கேட்டறிந்தார். வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த முப்படை முதல் தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அங்கு வைக்கப்பட்ட புத்தகத்தில் இரங்கல் குறிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார். அதில்; தாய்த்திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடு அடைகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: