கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் ஒற்றை பயன்பாட்டு முறை அறிமுகம்: தமிழக அரசுக்கு மருத்துவர்கள் பாராட்டு

சென்னை: தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் ஒற்றை பயன்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியதற்கு மூத்த சிறுநீரக மருத்துவர் சௌந்தரராஜன் மற்றும் பல்வேறு சிறுநீரக மருத்துவர்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக துறையில் சில தினங்களுக்கு முன்பு ஒற்றை பயன்பாட்டு முறையில் டயாலிசிஸ் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து மூத்த சிறுநீரக மருத்துவர் சௌந்தரராஜன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவமனை கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தி மலர், சிறுநீரக மருத்துவத்துறை மருத்துவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.

மேலும் இது குறித்து மூத்த சிறுநீரக மருத்துவர் சௌந்தரராஜன் கூறுகையில்: ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறை பயன்படுத்துவதால் தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் செய்து கொள்பவர்களுக்கு தற்சமயம் அவர்கள் பயன்படுத்தும் டயாலிசிஸ் சிகிச்சை கருவிகள் ஆறு முதல் எட்டு முறை அரசு மருத்துவமனைகளில் மறு சுழற்சி செய்யப்படுகிறது. ஆனால் இதுவே தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை கருவிகள் ஒரே ஒரு முறை தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிக கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டயாலிசிஸ் சிகிச்சை கருவிகளை பலமுறை பயன்படுத்துவதால் அதனால் நோய் தொற்று மற்ற நோயாளிகளுக்கு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. உதாரணமாக மஞ்சள் காமாலை, வைரஸ் தொற்று, கொரோனா தொற்று போன்ற தொற்று நோய்கள் மற்ற நோயாளிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.

டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ வல்லுநர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை கருவிகளை ஒரே ஒரு முறை பயன்படுத்துவதன் மூலமாக மருத்துவ வல்லுநர்களுக்கும், செவிலியர்களுக்கும் வேலைப்பளு குறைகிறது. டயாலிசிஸ் சிகிச்சை கருவிகளை மறு சுழற்சி செய்யும் தண்ணீர், நேரமும், கால விரயமும், நோய் தொற்று வாய்ப்பும் மிகக்குறைவு இது போன்ற ஒரு முறை பயன்படுத்தப்படும் டயாலிசிஸ் சிகிச்சை முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் குறிப்பாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறைக்கு பாராட்டுக்கள்.

இத்தகைய ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறைகள் தெலுங்கானாவில் கடந்த 5 ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே சிகிச்சை முறைகள் தான் வெளிநாடுகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே டயாலிசிஸ் சிகிச்சை முறைகளை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் அனைத்து சிறுநீரக நோயாளிகளும் பயன்பெறுவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறையை பாராட்டி  சிறுநீரக மருத்துவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த டாக்டர் மோகன்தாஸ், நெல்லையை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியம் சேலத்தை சேர்ந்த டாக்டர் ஜோன்ஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர்கள் இந்த முறையை வரவேற்று கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: