வரத்து குறைவு, முகூர்த்தம் எதிரொலி; திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு: மல்லிகைப்பூ கிலோ ரூ2,500க்கு விற்பனை

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு, திண்டுக்கல்லை சுற்றியுள்ள சின்னாளப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, வெள்ளோடு, பிள்ளையார்நத்தம், கலிக்கம்பட்டி, அதிகாரிபட்டி உள்பட பல கிராமங்களில் இருந்து நாள்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து தமிழகம் முழுவதும் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் பூக்களை விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர்மழை காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகி விட்டன.

இதனால் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைந்து விலை கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. 10 தினங்களுக்கு முன்பு ரூ.1,000க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.400க்கு விற்ற முல்லைப்பூ ரூ.1,000, ரூ.600க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,500, ரூ.400க்கு விற்பனையான ஜாதிப்பூ ரூ.700, ரூ.70க்கு விற்பனையான பன்னீர் ரோஸ் ரூ.180, ரூ.80க்கு விற்பனையான அரளிப்பூ ரூ.220, ரூ.75க்கு விற்பனையான சம்பங்கி ரூ.200க்கு விற்பனையானது.

பூ வியாபாரிகள் கூறுகையில், ‘‘தொடர் மழையால் பூக்களின் வரத்து குறைந்து விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இனி பனிக்காலம் என்பதால் பூக்களின் மீது பனி படர்ந்து கருகி விடும். அப்ேபாது பூக்களின் வரத்து மேலும் குறைந்து, விலை இன்னும் அதிகரிக்கும்’’ என்றனர்.

Related Stories: