கடையில் திருடியதாக கூறி பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல்

லாகூர்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள ஒரு கடைக்கு 4 பெண்கள் சென்றனர். அவர்கள் கடையில் பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த சிலர் அந்த பெண்களை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்களது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தி கல்லாலும், குச்சிகளாலும் தாக்கினர். நிர்வாண நிலையில் இருந்த பெண்கள், தங்களது ஆடைகளை திரும்பத்தரும்படி அங்கிருந்த கும்பலிடம் கெஞ்சினர். தங்களை விட்டு விடும்படி கதறி அழுதனர்.

ஆனால் அந்த கும்பல் 4 பெண்களையும் அடித்து தாக்கி தெருக்களில் இழுத்து சென்றனர். இதுதொடர்பான 2 வீடியோக்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி உள்ளது. அதில், 4 பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், ‘பைசலாபாத் அடுத்த பாவாசாக் சந்தையில் செயல்படும் எலக்ட்ரிக் கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் கேட்டோம். ஆனால் அவர்கள் திருடும் நோக்கத்தில் கடைக்குள் நுழைந்ததாக கூறி எங்களை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.

எங்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்களையும் எடுத்தனர். இந்த கொடுமையை யாரும் தடுக்க முன்வரவில்லை’ என்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையை சேர்ந்த நிறுவன மேலாளர் ஒருவர், பாகிஸ்தானில் எரித்து கொன்ற விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது 4 பெண்களை நிர்வாணப்படுத்தி கும்பலாக தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: