×

பொதுசொத்துக்களை விற்பனை செய்து தேசத்தின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது மோடி அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: அரசு சொத்துக்களை விற்பனை செய்து 70 ஆண்டுகளாக கட்டமைத்த தேசத்தின் பொருளாதாரத்தை மோடி அரசு அழித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் கூட்ட அரங்கில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் எம்.பி.க்கள், ராகுல் காந்தி, தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எம்.பி.க்கள் மத்தியில் சோனியா காந்தி பேசுகையில்,

நாகலாந்தில் 14 அப்பாவி இளைஞர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் இருந்து 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவு என்பது மிகவும் அதிர்ச்சிக்குரியது மோசமான செயல், மீதமுள்ள குளிர்காலக்கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்தது என்பது முன் எப்போதும் இல்லாத நடவடிக்கையாகும்.

எல்லைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை, அதுகுறித்து விவாதிக்கப்படவும் இல்லை. இதனால் தொடர்ந்து நாட்டின் எல்லைகளில் சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் எல்லைப் பிரச்சினை குறித்து பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால்தான், கூட்டாகச் சேர்ந்து பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

ஆனால், கடினமான கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. ஆனால் தெளிவும், விளக்கம் பெறுவதும் எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால், இதுகுறித்து விவாதிக்க மோடி அரசு நேரம் ஒதுக்குவதில்லை. நம்முடைய அண்டை நாடுகளுடன் உறவு, எல்லைப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தவும், ஆலோசிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு கடைசியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. ஆனால், ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் எந்தவிதமான விவாதங்களும் இன்றி நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றியது ஒன்றிய அரசு. விவசாயிகளின் ஒற்றுமை, அகிம்சை போராட்டம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவை அகங்காரம் பிடித்த மோடி அரசாங்கத்தை பணியவைத்தது. விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியை வணங்குகிறேன்.

கடந்த 12 மாதங்களில் 700 விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் குறிப்பாக குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க விவசாயிகளுக்கு துணைநிற்போம். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவும் போராடுவோம். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை குறைத்தது ஒட்டுமொத்தமாகப் போதாதது.

தேவையில்லாத விஸ்டா திட்டத்துக்கு மத்திய அரசு மக்களின் பணத்தை செலவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் தேசத்தின் சொத்துக்களான வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே மற்றும் விமானநிலையங்களை விற்பனை செய்து வருகிறது ஒன்றிய அரசு. கடந்த 70 ஆண்டுகளாக பொருளாதார, சமூக கண்ணோட்டத்தை மனதில் வைத்து உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை விற்று பொருளாதாரத்தை அழிக்கிறார். கொரோனா தொற்று, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டதிலிருந்து இன்னும் மீளவில்லை என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

Tags : Modi Government ,Sonia Gandhi , Sonia Gandhi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...