மளமளவென உயர்ந்தது மல்லிகையின் விலை:தோவாளை சந்தையில் கிலோ ரூ.2,600-க்கு விற்பனை... பனி மூட்டத்தால் மலர் உற்பத்தி பாதிப்பு!!!

கன்னியாகுமரி: கடும் பனிமூட்டத்தல் உற்பத்தி பாதிப்பு மற்றும் வரிசையான முகூர்த்தநாட்கள் எதிரொலியாக மல்லிகைப்பூவின் விலை கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாயை கடந்திருக்கிறது. மலர்கள்  வர்த்தகத்திற்கு பெயர்பெற்ற  குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை சந்தைக்கு மதுரை, ஓசூர், திண்டுக்கல், ராயகோட்டை, பெங்களூர் உள்ளிட்ட  பகுதிகளிலிருந்து டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றது. தற்போது குமரி மாவட்டத்தில் மல்லிகை, பிச்சி பூந்தோட்டங்கள் அமைந்திருக்கும் ஆரல்வாய்மொழி, குமாரபுரம், செண்பகராமன்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் மலர்கள் செடியிலேயே கருகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தோவாளை சந்தைக்கு மல்லிகை, பிச்சி மலர்களின் வரத்து பெருமளவில் சரிந்து விட்டதால் அவற்றின் விலை மளமளவென உயர்ந்திருக்கிறது.

அடுத்தடுத்து சுபமுகூர்த்த நாட்கள் அணிவகுத்துள்ளதும் மலர்களின் விலை ஏற்றத்திற்கு காரணம். குறிப்பாக மல்லிகையின் விலை கிலோ ஒன்றிற்கு இரண்டே நாட்களில்  ரூ.1,100 அதிகரித்துள்ளது. திங்களன்று  ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்கப்பட்ட மல்லிகையின் விலை இன்று 2 ஆயிரத்து 600 ரூபாயாக உயர்ந்து விட்டது.

மல்லிகை மட்டுமல்லாமல் பிற மலர்களின் விலையும் ஏகத்திற்கும் எகிறியிருக்கிறது. பிச்சி பூ கிலோ 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கனகாம்பரம் 1,000 ரூபாய்க்கும்,அரளி 450 ரூபாய்க்கும்,சம்பங்கி 300 ரூபாய்க்கும், வாடாமல்லி 100 ரூபாய்க்கும்,மஞ்சள்-சிவப்பு கேந்தி பூக்கள் 150 ரூபாய்க்கும் வர்த்தகமாகின்றன. மல்லிகைப்பூ  வாங்குவதற்கு சில்லறை வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவுவதால் இன்று மாலைக்குள் மல்லிகைப்பூவின் விலை கிலோ 3,000 ரூபாயை தாண்டும் என்கிறார்கள் தோவாளை மலர் வியாபாரிகள்.                       

Related Stories: