பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு-சாத்தூரில் பரபரப்பு

சாத்தூர் : சாத்தூரில் பெற்ற பிள்ளைகள் கவனிக்க மறுத்ததால் ஆற்று வெள்ளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாத்தூர் அருகேயுள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (75). இவரது 4 மகன்களும் திருமணமாகி அதே கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். 4 மகன்களும் தன்னை கவனிக்க மறுத்ததால் அருணாச்சலம் விரக்தியடைந்து இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு கிளம்பி சாத்தூர் வைப்பாற்றில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார்.ஏற்கனவே ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அருணாச்சலம் முட்செடிகளில் சிக்கியுள்ளார்.

இதனை கண்ட அவ்வழியே சென்ற மக்கள் உடனே சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் கயிறு கட்டி இறங்கி அருணாச்சலத்தை பத்திரமாக உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More