×

திட்டமிட்டபடி வரும் 16, 17-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை: வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வரும் 16, 17-ம் தேதிகளில் திட்டமிட்டபடி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 மத்திய பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து தெரிவித்திருந்தார். இந்த நிதியாண்டில் மட்டும் இரண்டு பொதுத் துறை வங்கிகள் மட்டும் தனியார் மயமாக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பு பொதுத்துறை வங்கிகள் மற்றும் அதன் ஊழியர்களிடையே கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இதனால் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையருடன் வங்கி சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து திட்டமிட்டபடி வரும் 16, 17-ம் தேதிகளில் 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு கைவிடவில்லை எனில், இந்த வேலைநிறுத்த போராட்டம் மட்டுமின்றி பல்வேறு வகைகளில் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படும் என்று வங்கிகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு வங்கி சேவைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.


Tags : Bank Employees Union , 16th, 17th, strike, Bank Employees Union
× RELATED வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம்:...