சங்கராபுரம் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த தலைமையாசிரியர் மனைவி சாவு-தலைமையாசிரியருக்கு தீவிர சிகிச்சை

சங்கராபுரம் : கடன்தொல்லையால் விஷம் குடித்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தலைமை ஆசிரியரின் மனைவி உயிரிழந்தார். தலைமை ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமரன் (51). இவர் பின்னல்வாடி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதவல்லி (45). இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அதிகளவில் கடன் ஏற்பட்டு இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் தங்களது மகளிடம் சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வருவதாக கூறி கணவன்-மனைவி இருவரும் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த லா.கூடலூர் காப்பு காட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அமுதவல்லி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பகண்டை கூட்டு சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமையாசிரியர் செந்தில்குமரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்து போன அமுதவல்லிக்கு 2 மகள்கள் உள்ளனர். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More