வாலாஜா அடுத்த நாராயணகுப்பம் கிராமத்திற்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடக்கம்-பொதுமக்கள் மகிழ்ச்சி

வாலாஜா : வாலாஜா அடுத்த நாராயணகுப்பம் கிராமத்திற்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பஸ்சை வரவேற்றனர்.

வாலாஜா அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவ்வாறு வசிப்பவர்கள் தங்களின் தேவைக்களுக்காக சுற்றுப்புற நகரங்களான வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு தினமும் வந்து செல்கின்றனர். அதில் வந்து செல்பவர்களுக்கு பஸ் வசதி இல்லாததால், வாங்கூர்  மற்றும் இடையந்தாங்கல் ஆகிய‌ கிராமங்களுக்கு சென்று அங்கிருந்து சுமார் 1 கி.மீ தூரம் நடந்து  சென்று பஸ் பிடித்து சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் நாராயணகுப்பம் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதற்கிடையே அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற‌ தலைவர்   அம்சவேணி பெரியசாமி தலைமையில்  அமைச்சர் ஆர்.காந்தியிடம் கடந்த மாதம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதையடுத்து அமைச்சர் ஆர்.காந்தி போக்குவரத்துத் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு நாராயணகுப்பம் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர கூறினார்.

அதன்படி நேற்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆற்காட்டிலிருந்து, நாராயணகுப்பம் கிராமத்திற்கு நேரடி பஸ் போக்குவரத்தை அமைத்தனர்.  ‌

இதைத்தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு தங்களின் கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை  அக்கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Related Stories: