கருப்பு பேப்பர்களை ரசாயனத்தில் கழுவினால் ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் எனக்கூறி மோசடி செய்ய முயன்ற 3 பேர் கைது-₹3.20 லட்சம், கார் பறிமுதல்

திருமலை :  ஆந்திராவில் கருப்பு பேப்பர்களை ரசாயனத்தில் கழுவினால் ரூபாய் நோட்டுகளாக மாறிவிடும் எனக்கூறி மோசடி செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குந்தக்கல் டிஎஸ்பி நரசிம்மன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அனந்தபூர் மாவட்ட எஸ்பி பகீரப்பாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று முன்தினம் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, குந்தக்கல் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக காரில் சுற்றிய நரேஷ்குமார், துரைசாமி, கோபாலகிருஷ்ணா ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், கோவாவில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து கருப்பு நோட்டு கட்டுகள் கொண்டு வந்துள்ளதாகவும், அசல் ரூபாய் நோட்டுகளை வழங்கினால் அதற்கு 3 மடங்கு கருப்பு நோட்டுகள் வழங்குவதாகவும், ரசாயனத்தில் கழுவினால் அசல் நோட்டாக மாறிவிடும் என கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மோசடியில் ஈடுபட வைத்திருந்த கருப்பு பேப்பர்கள், 3 செல்போன், ₹3 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டதால் மோசடி தடுக்கப்பட்டது.  இல்லாவிட்டால் இவர்களின் வலையில் பலர் ஏமாந்து இருப்பார்கள். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories:

More