ஹெல்மெட் அணியாதவரின் கன்னத்தில் மகள் கண்முன்னே பளார் விட்ட எஸ்ஐ-சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திருமலை : தெலங்கானாவில் ஹெல்மெட் அணியாததால் மகள் கண்முன்னே தந்தையை எஸ்ஐ கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் நிவாஸ். இவர் நேற்று முன்தினம் தனது 8 வயது மகளை பைக்கில் ஏற்றிக் கொண்டு மார்கெட்டுக்கு சென்றார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிருல்லாஹ் என்பவர் காய்கறிகளை வாங்கி திரும்பிய நிவாஸை தடுத்து நிறுத்தி விசாரித்தார்.

அப்போது, நிவாஸ் ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது. அதனால், எஸ்ஐ முனிருல்லாஹ் அவருடன் வாக்குவாதம் செய்தார். அதற்கு, நிவாஸ் என் வீடு அருகில் தான் உள்ளது. காய்கறிகளை வாங்க எனது மகளுடன் சென்றேன் என்றார். ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்காத எஸ்ஐ ஹெல்மெட் எதற்காக போடவில்லை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனால், ஆத்திரமடைந்த எஸ்ஐ, நிவாஸை அவரின் மகளின் முன்னே ஓங்கி கன்னத்தில் அறைந்தார். அதையடுத்து, அந்த இடத்தில் மக்கள் அதிகளவில் கூடினர். தன்னை தாக்கியவரிடம் நிவாஸ், நான் ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் தான் விதிக்க வேண்டும். எனது மகள் முன்பாக என்னை எதற்காக அடித்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த எஸ்ஐயும் பதிலளித்து வாக்குவாதம் செய்தார்.

நிவாஸை தாக்கிய எஸ்ஐக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு மக்கள் கலைக்கப்பட்டனர். முன்னதாக, நிவாஸ் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்த சம்பவங்களை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மாவட்ட எஸ்பி கூறுகையில், ‘நிவாஸ் தான் ஹெல்மெட் அணியாமல் வந்தது தொடர்பாக விசாரித்த எஸ்ஐயை ஆபாசமாக திட்டியிருக்கிறார். அதனால், தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது’ என்று விளக்கமளித்திருக்கிறார்.

Related Stories:

More