வேலூர் கோட்டை அகழியில் மதகு கால்வாய் அடைப்பை நீக்கி உபரி நீரை வெளியேற்றும் பணி நிறுத்தம்-ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாய் தூர்வாருவது எப்போது?

வேலூர் : வேலூர் கோட்டை அகழி தேங்கியுள்ள உபரி நீரை ஏர்கம்ப்சர் மூலம் மதகு கால்வாய் அடைப்பை நீக்கி நீரை வெளியேற்றும் பணி நேற்று நிறுத்தப்பட்டது.

வேலூரில் தொடர்ந்து பெய்த கன மழையால் கோட்டை அகழி நிரம்பியது. உபரிநீர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகத்திலும், கருவறையிலும் கடந்த 25 நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த உபரி நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறையினருடன் மாநகராட்சி பணியாளர்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இதில் புதிய மீன் மார்க்கெட் எதிரே அகழியில் இருந்து உபரிநீர் வெளியேறும் மதகு கால்வாயின் ஷட்டர்கள் கண்டறியப்பட்டது. ஆனால் சகதி முழுமையாக நிரம்பியுள்ளதால் ஜெட்ராடு, ஏர்கம்ப்ரசர் கொண்டு சகதியை அகற்றவும், உபரி நீரை வெளியேற்றவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 6வது நாளாக உபரிநீரை வெளியேற்றும் பணியை பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியினர் தொடர்ந்தனர். இதில் அகழியின் உள்பக்கம் மதகில் ஏர்கம்பரசர் கொண்டு சகதியை வெளியேற்றி வந்த நிலையில் மறுபுறம் வெளிப்புற மதகில் பெரிய அளவில் நீர்க்குமிழிகள் தோன்றி சிறிய அளவில் அகழி நீர் வெளியேற தொடங்கியது. ஆனால் நேற்று முன்தினம் திடீரென அகழி நீர் வெளியேறும் மதகு கால்வாயின் ஒருபக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இது அகழியின் மதகு கால்வாய்க்குள் விழுந்து நீர் வெளியேற முடியாமல் மண்ணுடன் சகதி சேர்ந்தது. தொடர்ந்து, இடிபாடுகளுடன் மண் அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது.

இருப்பினும் சகதி முழுவதும் அகற்றினால் தான் அகழியிலுள்ள நீர் வெளியேறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று அடைப்பு நீக்கும் பணியை அதிகாரிகள் நிறுத்தினர். ஆனால் கால்வாயில் விழுந்துள்ள சுவரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடவில்லை. இந்த பணி எப்போது தொடங்கும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இதனால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை கண்டுக்கொள்ளாமல் விட்டதன் விளைவு காரணமாக இன்று கானாறு கால்வாய் மீது பெரிய கட்டிடங்கள் உருவாகி உள்ளது. நீர் வெளியேற்ற மதகு கால்வாய் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கால்வாயின் முழுமையான கட்டமைப்பை அளந்து கண்டறிவதுடன், ஆக்கிரமிப்புகள் இருந்தால் பாரபட்சமின்றி அதை அகற்ற வேண்டும் என்றும் வெளிப்புற மதகில் இருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாயை முழுவதுமாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: