கடையம் அருகே குளத்துக்கரை ஓட்டை அடைப்பு பணி

கடையம் : கடையம் அருகே தர்மபுரமடம் ஊராட்சியில் பள்ளக்கால்பட்டி குளம் உள்ளது. இக்குளத்திற்கு இலுப்பை நதி மூலம் நீர்வரத்து காணப்படுகிறது. தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியுள்ளது. இதையடுத்து இந்த குளத்துக்கு பாசனத்திற்குட்பட்ட விவசாயிகள், விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பள்ளக்கால்பட்டி குளத்து மடை அருகில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதனால் குளத்திலிருந்து தண்ணீர் வீணாகி வெளியே சென்று ஆற்றில் கலக்கிறது. தொடர்ந்து ஓட்டையின் வழியாக தண்ணீர் செல்வதால் ஓட்டையின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் குளக்கரை உடையும் அபாயம் காணப்பட்டது. இதையடுத்து கடையம் வட்டார காங். தலைவர் முருகன், தர்மபுரமடம் ஊராட்சி தலைவர் ஜன்னத் சதாம், ஊராட்சி செயலாளர் குமரேசன் ஆகியோர் ஓட்டை விழுந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி ஓட்டையை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஓட்டையை நிரந்தரமாக அடைக்க அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: