8 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் டிச.20 முதல் குளிக்க அனுமதி-கலெக்டர் தகவல்

தென்காசி :  குற்றால அருவிகளில் டிச.20ம் தேதி முதல் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதாக தென்காசி கலெக்டர் கோபாலசுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று 2வது அலை பரவல் காரணமாக, குற்றாலத்தில் குளிப்பதற்கு கடந்த ஏப்.16ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், குற்றால அருவிகளில் குளிப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள், கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வருகிற டிச.20ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தென்காசி  கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிச.20ம் தேதி முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறது.

மெயினருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள், ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள், பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவர். சுற்றுலா பயணிகளின் சுகாதாரமும், பாதுகாப்பும் முதன்மையானது. பாதுகாப்பான கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான சுற்றுப்புறம் தயார் செய்யப்பட வேண்டும்.

2 மீட்டர் இடைவெளியில் சுற்றுலா பயணிகள் நிறுத்தப்படுவதற்கு தேவையான குறியீடுகள் செய்யப்பட வேண்டும். காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் சோதனை நடத்தப்பட வேண்டும். தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை வழங்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும். போதுமான கிருமிநாசினி இருப்பு வைத்திருக்க வேண்டும். தொற்று தடுப்பு நடைமுறைகள், நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து தேவையான இடங்களில் பதாகைகள், சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொற்று சந்தேகமுள்ள சுற்றுலா பயணிகளை தற்காலிகமாக தனிமைப்படுத்த வசதி செய்யப்பட வேண்டும். சிசிடிவி காமிரா மூலம் பயணிகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அருவி அருகில் அமைந்துள்ள கடைகளில் தவறாமல் அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கோட்டாட்சியர் அருவிக்கு வருகைதரும் பொதுமக்கள் தங்கும் இடங்களான சிறிய பெரிய விடுதிகள், உணவகங்கள், அருவி பகுதியில் அமைந்துள்ள கடை உரிமையாளர்களை அழைத்து நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு அருவியிலும் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், வட்டார மருத்துவ அலுவலர் வடகரை, குற்றாலம் கிராம நிர்வாக அலுவலர், தென்காசி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், குற்றாலம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஆகியோரும், பழைய குற்றாலம் அருவியில் தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), குற்றாலம் சப்-இன்ஸ்பெக்டர், தென்காசி வட்டார மருத்துவ அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சுகாதார ஆய்வாளர் ஆகியோரும்,

மேக்கரை பகுதி அருவிகளில் அச்சன்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர், இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி சுகாதார அலுவலர், கடையநல்லூர் வனச்சரக அலுவலர் ஆகியோரும், கண்ணுபுளிமெட்டு அருவிகளுக்கு புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் செங்கோட்டை இன்ஸ்பெக்டர்,  வனச்சரக அலுவலர், புதூர் பேரூராட்சி சுகாதார அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய மேலாண்மை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார். சுமார் 8 மாத இடைவெளிக்கு பிறகு வருகிற 20ம் தேதி அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் குற்றாலம் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீரமைப்பு பணிகள் தீவிரம்

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதையடுத்து தற்போது அருவி பகுதிகளை தயார் செய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் கூறுகையில், குற்றாலம் அருவி பகுதிகளில் சேதமடைந்த டைல்ஸ் தரைகள், உடை மாற்றும் அறை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை ரூ.5 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் போதுமான அளவிற்கு தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். குற்றாலம் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விரைவாக செய்து கொடுக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. பூங்காக்கள் சீரமைக்கப்படுகிறது என்றார்.

Related Stories: