துப்புரவு பணியை தனியார் வசம் ஒப்படைப்பதா?நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை 600 தூய்மை பணியாளர்கள் முற்றுகை

நெல்லை : நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணியை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்தும், மாடு முட்டி இறந்த மாரிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டும் சுமார் 600 தூய்மை பணியாளர்கள் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.நெல்லை மாநகராட்சியில் சுய உதவிக்குழுக்கள் அடிப்படையில் 750க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்கள் 250, நிரந்தர தொழிலாளர்கள் 200 என மொத்தம் 1200 பேர் பணியில் உள்ளனர். இந்நிலையில் நகராட்சிகளின் இயக்குநர், துப்புரவுப் பணியை ‘அவுட் சோர்சிங்’ முறையில் தனியாரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவால் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொழிலாளர்கள் பெறும் சம்பளம், இதர பண பலன்கள் குறையும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுமார் 600 தூய்மை பணியாளர்கள் நெல்லை மாநகராட்சியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தலைவர் மோகன் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை, சிஐடியூ துணைத் தலைவர் சுடலைராஜ், நிர்வாகிகள் நாராயணன், வரகுணன், நாகராஜன், தூய்மை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஜானகி, மாரியம்மாள், கோபி, சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாநகராட்சியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற மாடுகளை பிடிக்கும் போது மாடு முட்டி இறந்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மாரிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

நெல்லை மாநகராட்சியில் தூய்மை தொழிலாளர்கள், டிபிசி பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள் என 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் மாதா மாதம் 12 சதவீதம் இபிஎப் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணம் இபிஎப் அலுவலகத்தில் செலுத்தாமல் உள்ளது.

பிடித்தம் செய்யப்பட்ட தொகையை முறையாக செலுத்த வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பொறுப்பான பதில் வருவது இல்லை. எனவே இபிஎப் பிடிப்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாநகராட்சி நுழைவாயில் முன்பு அமர்ந்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி கமிஷனர் விஷ்ணுசந்திரன் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.

திடீர் சலசலப்பு

சிஐடியூ சார்பில் தூய்மை தொழிலாளர்களை திரட்டி, போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கூட்டத்திற்குள் புகுந்து சிஐடியூ நிர்வாகிக்கு எதிராக திடீர் கோஷங்கள் எழுப்பினர். மாடு முட்டி இறந்த மாரிமுத்துவுக்கு நீதி கேட்டு நடந்த மறியல், துப்புரவு பணி இயந்திரத்தில் சிக்கியதால் கை துண்டிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணியாளர்களின் போராட்டங்களில் சிஐடியூ நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்று கூறி அவர்கள் கண்டனக்குரல் எழுப்பினர். நெல்லை சந்திப்பு இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் அவர்களை வெளியே அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories:

More