×

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.533 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.12.2021) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 533 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 44 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 2 முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவித்தொகையாக தலா 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மதுரை மாநகராட்சியில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரியார் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் அருகில் 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூல வீதியில் 2 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புராதான அங்காடிகள் (Plaza Heritage Bazaar);

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 18 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட உய்யகொண்டான் ஆற்றின் முகப்பு, தஞ்சாவூர் மாநகராட்சியில் 15 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையத்தில் 14 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம்;

திருநெல்வேலி மாநகராட்சியில், 13 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், இப்பேருந்து நிலையத்தில் 11 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தம், 14 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிறுத்த நடைமேடைகள், 11 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலைய கூடுதல் கட்டடம்;

4 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா, 5 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்காவிற்கான கூடுதல் வசதிகள்; திருநெல்வேலி மாநகராட்சியில் 13 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மேலப்பாளையத்தில் 12 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 7 பசுமை வளாகப் பூங்காக்கள்;

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகப் பயன்பாட்டிற்காக 3 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை அமைப்பின் கீழ் தெரு துடைக்கும் இயந்திரம் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம், திருநெல்வேலி மாநகராட்சி, கே.டி.சி. நகரில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி விளக்குகள் மற்றும் உயர்கோபுர மின் விளக்குகள் த.மு. சாலையில் 6 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இருசக்கர வாகன நிறுத்தம், என்.ஜி.ஓ. காலனியில் மிதிவண்டிகள் செல்ல ஏதுவாக 2 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மிதிவண்டிப் பாதை;

வேலூர் மாநகராட்சியில் 13 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2.40 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம், 5 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சத்துவாச்சாரி வணிக வளாக மையம், விருப்பாச்சிபுரம், கன்னிகாபுரம் பகுதியில் 4 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டடம்;

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டடம் மற்றும் 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை;

தேனி மாவட்டம், சின்னமன்னுர் நகராட்சி, சமயகுளத்தில் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் குடியிருப்புக் கட்டடம், போடிநாயக்கனூர் நகராட்சியில் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பொது சுகாதார வார்டு அலுவலகக் கட்டடங்கள்;

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சி, காமராஜர் நகரில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிக் கட்டடம், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி, மேலத்தூர் சாலையில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிக் கட்டடம்;

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி, போகநல்லூர் உரக்கிடங்கு வளாகம், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி, வாகைக்குளம் உரக்கிடங்கு வளாகம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, கோட்டவிளைபட்டிரோடு உரக்கிடங்கு வளாகம், விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டை நகராட்சி, சுக்கிலநத்தம் உரக்கிடங்கு வளாகம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, அந்நியூர் உரக்கிடங்கு வளாகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் நகராட்சி, வெங்கடேசபுரம் உரக்கிடங்கு வளாகம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி, ஆர்.பி. சிவம் நகர் ஆகிய இடங்களில் 24 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள்;
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையம், கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி, அரசு மருத்துவமனை வளாகத்தில் 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு தங்குமிடம்;

நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் செயல்படும் பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில், இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் நெமிலி பேரூராட்சியில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள்நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் தங்குமிடம், ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் பேரூராட்சியில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை மற்றும் நம்பியூர் பேரூராட்சியில் 1 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடிகாலுடன் கூடிய தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை, கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பேரூராட்சி வாரச்சந்தை வளாகத்தில் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்;

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 241 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் மற்றும் மூப்பேரிபாளையம் பேரூராட்சிகள், சூலூர் விமானப்படை தளம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பேரூராட்சி ஆகியவற்றிற்கு குடிநீர் வழங்கிடவும், பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 155 ஊரகக் குடியிருப்புகளுக்கான மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக்குடிநீர் திட்டம்;

தென்பெண்ணை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 8.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாகொண்டபள்ளி மற்றும் 27 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் என மொத்தம் 533 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முன்களப் பணியாளர்கள் - களப்பணியாளர் ஜி. கணேசன் மற்றும் மின்னியலாளர் எம். பாலாஜி ஆகியோரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா நிவாரண உதவித்தொகையாக தலா 25 இலட்சம் ருபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.

பேரூராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 37 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வரித்தண்டலர், அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், துப்புரவு மேற்பார்வையாளர், குழாய் திறப்பாளர், மதகு திறப்பாளர், தூய்மைப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 1000 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், குழாய் திருப்புநர், தூய்மைப் பணியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா. செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Municipal Administration ,Department of Drinking Water Supply ,Q. Stalin , MK Stalin
× RELATED குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை...