12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது முன்னுதாரணம் அற்றது; ஏற்க முடியாதது: காங். தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம்

டெல்லி: 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். அச்சமயம் 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம், விவசாயிகள் போராட்டம், நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய சோனியா காந்தி, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அரசியலமைப்பு மற்றும் விதிகள் இரண்டையும் மீறுவதாக கூறினார்.

12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்றும் சோனியா குறிப்பிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது அவை நடவடிக்கைகளில் இடையூறு செய்ததாகவும், அவை மரபுகளை மீறிவிட்டதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள், சிவசேனா கட்சி 2 பேர், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் என மொத்தம் 12 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: