ஆவடி, திருவேற்காட்டில் வங்கி வாசலில் ரூ.10 நோட்டுகளை கீழே போட்டு கவனத்தை திசை திருப்பி ரூ.1.75 லட்சம் கொள்ளை அடித்த மர்ம கும்பல்!!

சென்னை: ஆவடியை  அடுத்த மிட்டினம்பள்ளியை சேர்ந்த 55 வயதான மகாலிங்கம் ஆவடி டேங்க் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.நேற்று நண்பகல் ஆவடி CTH சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் 75ஆயிரம் ரூபாய் பணத்தை  எடுத்துவிட்டு அதனை இருசக்கர வாகன பெட்ரோல் டேங்க் மீது வைத்து  வாகனத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் கீழே  நான்கு பத்து ரூபாய் நோட்டுகள் கிடப்பதாகவும், அந்த பணம் தங்களுடையதா என்றும் கேட்டுள்ளார். திரும்பி பார்த்த மகாலிங்கம் கீழே  கிடந்த பத்து ரூபாய் நோட்டுகளை குனிந்து எடுத்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது இருந்த 75 ஆயிரம் ரூபாய் பணத்தை  மர்மநபர் ஒருவர் எடுத்து சென்றுவிட்டார்.

பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார் மகாலிங்கம் . இதையடுத்து மகாலிங்கம் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து மகாலிங்கம் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூவர் ஒன்றாக வந்து நோட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் அந்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

இதேபோல், திருவேற்காட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவிஆய்வாளர் கருணாகரபாண்டியன் IOP வங்கியில் இருந்து எடுத்து வந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை, பத்து ரூபாய் நோட்டை கீழே போட்டு மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது . இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பெயரில்  திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Stories:

More