'உக்ரைனை தாக்கினால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்': ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை..!!

வாஷிங்டன்: உக்ரைனை தாக்கினால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளும் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். உக்ரைனுக்குள் ஊடுருவ ரஷ்ய படைகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், இருநாட்டு எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இச்சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைனை தாக்கினால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஐரோப்பிய கூட்டமைப்போடு இணைந்து உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளும் வழங்கப்படும் என்றார். உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. படைகளை முன்னகர்த்தி சென்று உக்ரைனை கைப்பற்ற நினைத்தால் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி தரப்படும் எனவும் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

சோவியத் கூட்டமைப்பாக இருந்த போது அதனோடு இருந்த உக்ரைன், 1991ம் ஆண்டு தனி நாடாக மாறியது. எனினும் உக்ரைனோடு இருந்த கிரீமியாவை ரஷ்யா 2014ம் ஆண்டு கைப்பற்றியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. உக்ரைன் மீது படை எடுக்க 90 ஆயிரம் ராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் ரஷ்யா நிலை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: