ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 விழுக்காடாகவே தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், 2021 - 22ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 விழுக்காடாக இருக்கும் என்றும் 2022 - 23ல் 17.2 விழுக்காடாக உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் பல்வேறு மாநிலங்களின் வாட் வரி குறைப்பு நடவடிக்கையால் நுகர்வு அதிகரித்திருப்பதாக கூறிய சக்தி காந்த தாஸ், இதனால் தேவை அதிகரித்திருப்பதாக கூறினார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 9வது முறையாக மாற்றமின்றி  4 சதவீதமாக தொடர்வதாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி  3.35 சதவிகிதமாக தொடர்வதாகவும் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். 5வது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: