2018-2019ம் நிதி ஆண்டிற்கு பிறகு புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை :நிதியமைச்சகம்

டெல்லி : 2018-2019ம் நிதி ஆண்டிற்கு பிறகு புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கறுப்பு பணத்தை தடுக்கும் வகையில், 2016 நவம்பர் 8ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.அதற்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்த நிலையில் மாநிலங்களவையில் நாட்டில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறித்த கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார்.

அதன்படி 6,72,600 ரூபாய் மதிப்பிலான 3363 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே ரிசர்வ் வங்கி அச்சடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 2,233 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் 1.75% மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் என்றும் 2018-2019ம் நிதியாண்டிற்கு பிறகு புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான தேவையும் ஏற்படவில்லை என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. .

Related Stories: