×

'சீன குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்கிறேன்': அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியா அறிவிப்பு

ஆஸ்திரேலியா: சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை அமெரிக்காவை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவும் புறக்கணித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே மூண்ட வர்த்தக போர் தற்போது அரசியல் போராக உருவெடுத்துள்ளது. இந்த தாக்கம் இரு நாடுகளுக்கு இடையே கடும் பிளவை ஏற்படுத்தி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும் போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்த போட்டிகளை காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளன.

இதற்கிடையே வரும் பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. சீனாவில் வடமேற்கில் உள்ள ஜிங் சியாங் மாகாணத்தில் உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிராக சீனா மனித உரிமை மீறல் நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து அதன் நட்பு நாடான ஜப்பானும் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை அமெரிக்காவை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவும் புறக்கணித்துள்ளது.

இதனை அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, இந்த முடிவு ஒலிம்பிக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் விளையாட்டில் அரசியலை புகுத்தி ஒலிம்பிக் விதிகளை அமெரிக்கா மீறி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் உய்குர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் சித்ரவதை மற்றும் படுகொலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை கண்டித்து பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என மனித  உரிமை ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


Tags : Chinese Winter Olympics' ,Australia ,US , Chinese Winter Olympics, Australia
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...