தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பொங்கல் முதல் 3வது ரயில் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3வது ரயில் பாதையில் பொங்கல் முதல் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் முடிவு பொங்கல் பரிசாக வந்துள்ளதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது சென்னை மற்றும் புறநகர் ரயில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அதன்படி 256 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாம்பரம் - கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள்கோவில், சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு என 3 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த பாதையில் சிக்னல் மற்றும் மின்மயமாக்கப்பட்ட பணிகளும், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த விரிவாக்க பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இருப்பு பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டதை அடுத்து பொங்கல் முதலாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3வது ரயில் பாதையில் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய வழித்தடத்தால் காத்திருப்பு நேரம், கூட்ட நெரிசல் குறையும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories: