பாசமாக பேசி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை, பணம் திருட்டு: மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை

சென்னை: மூதாட்டியிடம் பாசமாக பேசி நூதன முறையில் நகை, பணத்தை திருடி சென்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மாதவரம் பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் விமலா(61). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது ஒரே மகள் திருமணமாகி துபாயில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தனியாக வீட்டில் வசித்து வந்த விமலா நேற்று முன்தினம் தி.நகருக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பினார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் அவரிடம் பாசமாக பேசினார். இதனால் வீட்டுக்கு வந்ததும் டீ குடித்து விட்டு செல்லுமாறு விமலா வற்புறுத்தி உள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுனர் அவரே டீ போட்டு கொடுப்பதாக கூறியுள்ளார். விமலாவும் அதை நம்பி சரி என்று ஒப்பு கொண்டார்.

பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுனர் சமையல் அறைக்குச் சென்று டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தார். அந்த டீ குடித்த சற்று நேரத்தில் விமலா மயங்கி விழுந்தார். பிறகு கண் விழித்து பார்த்தபோது, ஆட்டோ டிரைவர் அங்கு இல்லை. தான் அணிந்திருந்த 7 சவரன் மதிப்புள்ள தங்க செயின், வளையல் ஆகியவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டில் வைத்திருந்த 60 ஆயிரம் பணம் மற்றும் செல்போனும் காணாமல் போயிருப்பதை அறிந்தார். பின்னர், இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார்  நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: