தினசரி மாற்றம் செய்யாதபோதும் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் தொடர்ந்து உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

* வரியை குறைத்ததோடு நிறுத்திய ஒன்றிய அரசு

* வரி வருவாயை ஈட்டும் நோக்கம்தான் காரணமா?

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை அந்த அளவுக்கு குறைக்கப்படாதது, வாகன ஒட்டிகள், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றியமைக்கின்றன. ஆனால்,  பெட்ரோல், டீசல் விலை ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேலாக மாற்றம் இன்றி நீடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காத புதிய உச்சத்துக்குச் சென்றபோது கூட, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை.  இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் நூறு ரூபாயை தாண்டிய நிலையில், திமுக ஆட்சி அமைத்ததும், தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல் மீதான மாநில வரியில் 3 ரூபாயை குறைத்தது. இதன்பிறகும் ஒன்றிய அரசு பெட்ரோல் விலை குறைப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது, கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

 இந்த சூழ்நிலையில், நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பாஜ படு தோல்வியை சந்தித்ததால், பெட்ரோல் மீதான வரியை ₹5ம், டீசல் மீதான வரியை ₹10-ம் ஒன்றிய அரசு குறைத்தது. இது கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்பிறகு பாஜ ஆளும் மாநிலங்கள் உட்பட சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது. கடைசியாக, டெல்லி அரசு வரியை குறைத்தது.  அதன்பிறகு, கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத்தொடங்கியது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அவ்வப்போது ஏற்றம் இறக்கம் கண்டு வந்தாலும்,  உண்மையில், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை அடிப்படையிலேயே, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதுவும் ஏற்கெனவே உள்ள இருப்பின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது என, பெட்ரோலியத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, தற்போது இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலருக்கு கீழ் வந்து  விட்டது. அக்டோபரில் கச்சா எண்ணெய் சராசரி விலை ஒரு பேரல் 82 டாலராகவும், நவம்பரில் 80 டாலருக்கு மேலும் இருந்தது. கடந்த 2019-20 நிதியாண்டு புள்ளி விவரங்களின்படி, பொதுவாக இந்த விலை ஓமன் மற்றும் துபாய் கச்சா எண்ணெயின் சராசரி விலை மற்றும் பிரண்ட் கச்சா எண்ணெயின் சராசரி விலையை வைத்து 75.62 மற்றும் 24.38 என்ற விகிதாசாரத்தில் கணக்கிடப்படுகிறது.

  இதுகுறித்து பெட்ரோலியம் நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், ஏற்கெனவே வாங்கிய கச்சா எண்ணெய் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. இது இன்னும் தீரவில்லை. எனவேதான், கச்சா எண்ணெய் வாங்கியபோது இருந்த உச்ச பட்ச சர்வதேச விலை அடிப்படையில் இப்போது விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறையத்தொடங்கினால், அதற்கான பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும், என தெரிவித்தனர். கடந்த நவம்பர் 4ம் தேதி ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த பிறகு, சில மாநில அரசுகளின் வரி குறைப்பையும் சேர்த்து லிட்டருக்கு ₹19 வரை குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு முன்பே, முன்னாடியோக விலை குறைப்பை தமிழக அரசு அறிவித்து விட்டது. இத்துடன் சேர்த்து தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு மொத்தம் ₹8க்கு மேல் குறைந்து விட்டது.  ஆனால், மீண்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாயை தாண்டிவிட்டது.

 எண்ணெய் நிறுவனங்கள், மேற்கண்ட வரி குறைப்பை மட்டுமே விற்பனை விலையில் சரி செய்துள்ளதாகவும், உண்மையில் சர்வதேச சந்தை அடிப்படையில் விலை குறைப்பு பலனை மக்களுக்கு வழங்க வில்லை என எண்ணெய் நிறுவன வட்டாரங்களில் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், உடனடியாக அந்த பலனை மக்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்காதது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

குறையுது ஆனா... குறையல...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பேரல் 70 டாலருக்கு கீழ் இருந்தது. செப்டம்பரில் கச்சா எண்ணெய் சராசரி விலை பேரல் 73.13 டாலரானது. ஆகஸ்ட் இறுதியில் சென்னையில் பெட்ரோல் ₹99.20 காசுகளாக இருந்தது.  தற்போது மீண்டும் பேரல் 70 டாலருக்கு வந்துள்ளதால், ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசின் வரி குறைப்பையும் சேர்த்து இந்த விலையில் ₹8க்கு மேல் குறைந்திருக்க வேண்டும். ஆனால், இன்னமும் பெட்ரோல் விலை சென்னையில் ₹101க்கு மேல்தான் நீடிக்கிறது.

Related Stories:

More