இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க நோட்டரி பப்ளிக் சட்டத்தில் திருத்தம்: வரைவு மசோதா வெளியீடு

புதுடெல்லி: இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் நோட்டரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய நோட்டரி சட்டம் 1952-ன்படி, நோட்டரி பப்ளிக் ஆக உரிமை பெறுபவர் எத்தனை ஆண்டுகளானாலும் செயல்பட முடியும். அதனை தற்போது செய்யப்பட உள்ள திருத்தத்தின் மூலம், பதிவு செய்த முதல் 5 ஆண்டுகள், பிறகு 2 புதுப்பித்தலுக்கு தலா 5 ஆண்டுகள் வீதம் 10 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள் மட்டுமே நோட்டரி பப்ளிக்காக செயல்பட முடியும். இதனால், இளைஞர்கள் நோட்டரி பப்ளிக்காக உருவாக புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

நோட்டரி பப்ளிக் மேற்கொள்ளும் நோட்டரி பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. முறைகேடுகளில் ஈடுபடும் நோட்டரி பப்ளிக் ஆக பணியாற்றுபவர்களின் சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சட்ட விவகாரத்துறையின் இணையதளப் பக்கத்தில் இச்சட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் 15ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: