முன்னாள் முதல்வர் திடீர் ராஜினாமா கோவாவில் காங்.க்கு மேலும் ஒரு அதிர்ச்சி: எம்எல்ஏ.க்கள் பலம் 3 ஆனது

பனாஜி: கோவாவில் எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வருமான ரவி நாயக் ராஜினாமா செய்துள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு கட்சி தாவல்கள் அதிகரித்து வருகின்றது.  கடந்த செப்டம்பரில் கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான லூய்சின்கோ பெலரியோ, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். திரிணாமுல் சார்பாக, அடுத்த ஆண்டு தேர்தலில் அவர்  போட்டியிட உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏவும்,  கோவா முன்னாள் முதல்வருமான ரவி நாயக்கும் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பாண்டா தொகுதி எம்எல்ஏ.வான அவர், தனது ராஜினாமா கடிதத்தை நேற்று சபாநாயகர் ராஜேஷ் பட்நேகரிடம் வழங்கினார். ராஜினாமா கடிதம் கொடுப்பதற்காக வந்திருந்த ரவி நாயக் பாஜ.வில் இணைந்துள்ள தனது 2 மகன்களையும் அழைத்து வந்திருந்தார்.  ரவி நாயக் விரைவில் பாஜ.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் ராஜினாமாவை தொடர்ந்து, 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது.

Related Stories:

More