கொரோனா 3வது அலை அச்சத்தால் தகவல் தொழில்நுட்ப நகரங்கள் முடங்கும் அபாயம் 2022க்குள் 30 லட்சம் பேர் வேலை இழக்க வாய்ப்பு

* பெங்களூருவில் மட்டுமே 13 லட்சம் பேர் வேறு வேலை தேடும் அவலம்

* வொர்க் பிரம் ஹோமால் ஐடி நிறுவனங்களுக்கு ₹7.5 லட்சம் கோடி லாபம்

உலகளவில் அதிகப்படியாக இளைஞர்களை கவர்ந்த வேலைகளில் மிகவும் முக்கியமானது தொழில் நுட்பத்துறை. அதிகளவு சம்பளம், கவுரமான வேலை, அடிக்கடி வெளிநாட்டு பயணம், கார், பங்களா என்ற சொகுசு வாழ்க்கை அனுபவிக்கலாம் என்று இந்த வேலையை தேர்வு செய்கின்றனர். தொழில்நுட்ப துறை என்றால் வெறும் சாப்ட்வேர் தயார் செய்வது மட்டுமில்லை. அதையும் தாண்டி, ஹார்டுவேர் பொருட்கள் வேலை செய்யும் புரோகிராமை தயார் செய்து, அவற்றை செயல்பட செய்வது, இணைய தள பிரிவு, மனித வள மேலாண்மை, கால் சென்டர் என்று பல்வேறு பிரிவுகளாக தொழில்நுட்ப துறை செயல்பட்டு வருகிறது. குறைந்த ஊதியமே ₹40 ஆயிரத்தில் இருந்து துவங்குவதால், நாளுக்கு நாள் தொழில்நுட்ப துறையில் பணியாற்ற இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் பணி தொடர்ந்தால், 10, 15 வருடங்களில் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். இதனால் இளைஞர்கள் மோகம் தொழில் நுட்ப துறையில் இருந்தது. இதற்கு படிப்பு ஒரு தடையில்லை. எந்த டிகிரி படித்தாலும், சாப்ட்வேர் தயார் செய்வதற்கான ஞானம் இருந்தால் போதும், அதற்கான படிப்புகளை படித்து திறனை வளர்த்து கொண்டு, தொழில்நுட்ப துறையில் நுழைந்து விட முடியும். அவர்களின் வாழ்க்கை முறையே வேறாக இருந்தது.

வேலை வாங்கும் தனியார் நிறுவனங்களும் ஊதியம் மட்டுமின்றி, ஊழியர்களை கவனிப்பதில் குறை வைப்பது இல்லை. நேரத்திற்கு நேரம் ஸ்னாக்ஸ், டீ, காபி, குழந்தைகள் பராமரிப்பு, மதியம் உணவு என பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகிறது. ஒவ்வொரு ஊழியர்களுக்கும் பிரத்யேக வசதியுடன் கூடிய மேஜைகள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகிறது. அவர்கள் உலகமே வேறு என்று கூறலாம். ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் அவர்கள் வாழ்க்கை முறை மாறிவிட்டது. சிட்டியில் இருந்தவர்கள் கிராமத்தை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். இயற்கை காற்று, ஒரு லேப்டாப், வீடுகளில் கிடைக்கும் நொறுக்கு தீனி, அதிவேகத்தில் இயக்கும் இணையதளம் என்று மாறிவிட்டனர். இதனால் விழிப்படைந்த ஐ.டி நிறுவனங்கள், இது நல்ல திட்டம் என்று கூறி, ஊழியர்கள் வீடுகளில் இருந்தே கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்க்க வைத்து வருகிறது. இதனால் ஐ.டி நிறுவனங்களுக்கு பல பில்லியன் டாலர் லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் மின்சார செலவு, தண்ணீர் கட்டணம், வாகன செலவு, டீ, காபி, நொறுக்கு தீனிகள் செலவு ஆகியவை இல்லை. இதனால் செலவு குறைவு. இதனால், வருமானம் அதிகரித்துள்ளது. கூடுதல் லாபம் பெறும் நோக்கில் ஆட்குறைப்பும் பல நிறுவனங்கள் செய்துள்ளது. தகுதியானவர்கள், தகுதியில்லாதவர்கள் என்று கிடையாது, சீனியாரிட்டி அடிப்படையில் வேலையில் இருந்து தூக்கி விட்டனர்.

இதில் அதிகப்படியான பாதிப்பு கொரோனா முதல் அலையின் போது தான் ஏற்பட்டது. 2019ம் ஆண்டு சுமார் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. இவர்களில் பலர் வேறு நிறுவனத்தில் சேர்ந்து விட்டனர். சிலர் சொந்த ஊரே சொர்க்கம் என்று விவசாயம், சொந்த தொழில் என்று செய்ய தொடங்கி விட்டனர். இரண்டாவது அலையிலும் அதேபோன்று பலர் வேலை இழந்தனர். குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் தொழில் நுட்ப பூங்கா என்று அழைக்கப்பட்ட பெங்களூருவில் பல லட்சம் பேர் வேலை இழந்தனர். லட்சக்கணக்கானவர்கள் ஆட்டோமேஷன் கீழ் கொண்டுவரப்பட்டனர்.  இது தொடர்பாக 2020ம் ஆண்டு ஜனவரியில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியா முழுவதும் 30 லட்சம் பேர் 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஐ.டி வேலை  இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இதில் பெங்களூருவில் சுமார் 10 லட்சம் முதல் 13 லட்சம் பேர் வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அளவில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் ரூ.7.5 லட்சம் கோடி வரை சேமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சேமிப்புக்கு ஆட்கள் குறைப்பில் மட்டுமில்லை. அவர்களுக்கான செலவு மற்றும் வீடுகளில் இருந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் லாபம் என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டும்  ரூ.3.75 லட்சம் கோடி வரை சேமிப்பாகியுள்ளது.

இது தொடர்பாக, பெங்களூருவில் சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 3000 ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருவது தெரிய வந்துள்ளது.  குறிப்பாக, எலக்ட்ரானிக் சிட்டியில் மிகவும் அதிகம். இவற்றில் குறைந்தது சிறிய ஐ.டி நிறுவனங்களில் ஆண்டிற்கு 25 கோடி டாலர் வருவாய் கிடைக்கிறது. பெரிய நிறுவனங்கள் என்றால் பில்லியனில்தான் வருவாய். நிறுவனங்களுக்கு லாபம் என்றாலும் ஊழியர்களின் நிலைதான் கவலைக்கிடம். இந்தியா முழுவதும் 1.60 கோடிக்கும் அதிகமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 90 லட்சம் பேர் ஐ.டி நிறுவனம், கால்சென்டர் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 30 லட்சம் பேர் வேலையிழப்பு என்றால் என்ன என்று யோசித்து பாருங்கள்.

இதனால் பெரும்பாலானவர்களுக்கு ஐ.டி நிறுவனங்களின் மீது இருந்த மோகம் குறைந்து வேறு துறைகளின் பக்கம் கவனத்தை திசை திருப்ப தொடங்கி விடுகின்றனர். தற்போது 3வது அலை பரவியுள்ளது. அடுத்த என்ன கொரோனா தொற்று வரபோகிறது என்று தெரியாது. ஆனால் உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2023ம் ஆண்டு ஜனவரி வரைக்கு வைரஸ் உருமாற்றம் அடைந்து, வேறு வகையில் கொரோனா தொற்று மக்களை பாதித்து கொண்டுதான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் 2023ம் ஆண்டு வரை ஐ.டி நிறுவனங்கள் செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுவரை வீடுகளில் இருந்து தான் பணியாற்றவேண்டும்.

பெங்களூருவில் 70 லட்சம் ஐ.டி ஊழியர்கள்

இந்தியா முழுவதும் 1.60 கோடி ஐ.டி ஊழியர்கள் என்றால் பெங்களூருவில் மட்டும் 70 லட்சத்திற்கும் அதிகமான ஐ.டி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக சென்னையில் தான் கூடுதல் ஐ.டி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியா முழுவதும் 30 லட்சம் பேர் வேலை இழப்பு என்றால், கர்நாடகத்தில் 2022ம் ஆண்டு இறுதிக்கு 10 முதல் 13 லட்சம் வரையிலானவர்கள் வேலை இழக்க கூடும் என்று கூறப்படுகிறது.

சென்னைக்கு தாவும் ஊழியர்கள்

இந்தியாவில் சென்னை, பெங்களூருவில்தான் அதிகளவு ஐ.டி நிறுவனம் உள்ளது. சென்னையில் வேலை இழக்கும் இளைஞர்கள், பெங்களூருவுக்கு மாறிவிடுகின்றனர். அதேபோன்று பெங்களூருவில் வேலை இழக்கும் ஊழியர்கள் சென்னையில் உள்ள நிறுவனங்களுக்கு மாறிவிடுகின்றனர். ஆன்லைன் வீடியோ காணொலி வாயிலாக நேர்முக தேர்வில், கலந்து கொண்டு, வீடுகளில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். சோதனை காலங்களில் இப்படியும் ஒரு வினோதம் நடந்து வருகிறது. இதனால் வேலை இழக்கும் ஊழியர்கள் அச்சம் கொள்வது இல்லை.

* கொரோனா முதல் அலையின் போது தான்  ஏற்பட்டது. 2019ம் ஆண்டு சுமார் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை  ஏற்பட்டது. இவர்களில் பலர் வேறு நிறுவனத்தில் சேர்ந்து விட்டனர். சிலர்  சொந்த ஊரே சொர்க்கம் என்று விவசாயம், சொந்த தொழில் என்று செய்ய தொடங்கி  விட்டனர். இரண்டாவது அலையிலும் அதேபோன்று பலர் வேலை இழந்தனர்.

* இந்தியா முழுவதும் 1.60 கோடிக்கும்  அதிகமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 90 லட்சம் பேர் ஐ.டி  நிறுவனம், கால்சென்டர் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.  இதில் 30 லட்சம் பேர் வேலையிழப்பு என்றால் என்ன என்று யோசித்து பாருங்கள்.

Related Stories: