வேளாண் சட்ட போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வாரிசுக்கு அரசு வேலை: மக்களவையில் ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஓராண்டாக போராட்டம் நடத்திய போது உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடும், அவர்களது வாரிசுகளுக்கு வேலையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தினார். ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாய அமைப்பினர் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றது. இருந்தாலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.

ஆனால், உயிரிழந்த விவசாயிகள் குறித்த கணக்கு எதுவும் தங்களிடம் இல்லை என்று ஒன்றிய அரசு கூறுகிறது. விவசாயிகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார். ஆனால், நவம்பர் 30ம் தேதி ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர், விவசாயிகள் உயிரிழப்பு குறித்து எந்த விவரமும் தங்களிடம் இல்லை என்று அவையில் கூறுகிறார். விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயிகள் 400 பேருக்கு அம்மாநில அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. இதில், 152 விவசாயிகள் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பும் வழங்கியுள்ளது. இதே போன்று அரியானாவில் 70 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்ட பட்டியலும் எங்களிடம் உள்ளது. விவசாயிகள் அவர்களின் உரிமைகளை பெற வேண்டும் என்பதே எங்கள் விரும்பம். எனவே, உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடும், அவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: