அரசு அலுவலகத்தில் திரிணாமுல் பெண் தலைவர் கைத்துப்பாக்கியுடன் கெத்து: வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை

மால்டா:  மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட பிரிவுக்கு தலைவராக இருப்பவர் மிரினாலினி மண்டல் மாய்டி. இவர் பழைய மால்டா பஞ்சாயத்து சமிதியின் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில், தனது அலுவலகத்தில் ஒரு கையில் துப்பாக்கியுடன் நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜ மாவட்ட தலைவர் கோபிந்தா சந்திரா மண்டல் கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், வெடிப்பொருட்கள் கிடங்காக மாற்றி வருகிறது. மிரினாலினியை சோதனை செய்தால் அவரிடம் வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் போலீசாருக்கு கிடைக்கும்.

இதுதான் திரிணாமுல் கலாசாரம்.  தங்களின் வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் போலீசார் எதையும் செய்யாமல் இருக்கிறார்கள்” என்றார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்த போட்டோ தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அலுவலக நாற்காலியில் அமர்ந்து கொண்டு யாரும் துப்பாக்கியுடன் விளையாட மாட்டார்கள். அது உண்மையான துப்பாக்கியா அல்லது போலி துப்பாக்கியா என போலீசார் விசாரிப்பாளர்கள். இதுபோன்ற சம்பவத்தினால் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது” என்றார்.  

Related Stories: