நீதித்துறையில் ஒன்றிய அரசு தலையீடு இருக்கக் கூடாது: மக்களவையில் தயாநிதி மாறன் கருத்து

புதுடெல்லி: நீதித்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தலையிடக் கூடாது என்று மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் வலியுறுத்தி பேசினார். நாடாளுமன்றத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா குறித்த விவாதத்தின் போது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது:நீதித்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்களின் தலையீடு இருப்பதாக மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. நீதித்துறையின் மீது மக்கள் அபரிதமான நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை ஆட்சியாளர்கள் காப்பாற்ற வேண்டும். உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதில் முறையே 62, 65 என பாகுபாடு உள்ளது. இதை பொதுவாக ஏன் மாற்றக் கூடாது.  இருவருக்கும் 65 வயது என்று நிர்ணயித்து தனி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யலாம்.

திமுக சார்பில் நீண்ட நாளாக ஒரு கோரிக்கை நிலுவையில் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதி மக்களும் நீதிக்காக டெல்லி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டி இருக்கிறது. வழக்கில் வாதாட இங்குள்ள வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டி இருக்கிறது. எனவே, நாட்டின் அனைத்து பிராந்தியத்திலும் நிரந்தர உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலத்தோடு இருக்கும் ஒன்றிய அரசு இது போன்ற நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மையும், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் நிச்சயம் வேண்டும். கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பழங்குடியின பெண் நீதிபதி கூட நியமிக்கப்படவில்லை. பட்டியல் இனத்தை சேர்ந்தவர் 5 பேர் மட்டுமே உள்ளனர். ஒரு குறிப்பிட்ட வகுப்பை சார்ந்தவர்கள் மட்டும் நாட்டின் நீதித்துறை மீது ஆதிக்கம் செலுத்துவதை ஏற்க முடியாது.

ஒன்றிய அரசுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கிய தலைமை நீதிபதிகள் ஆளுநராகவும், எம்.பிக்களாகவும், பதவி பெறுகிறார்கள். இவர்களுக்கு எந்த வகை ஓய்வூதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது? நீதிபதிகளுக்கான ஓய்வூதியமா?, ஆளுநருக்கான ஓய்வூதியமா? அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியமா? என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் இறுதியாக என்ன பதவி வகித்தனரோ அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை கெடுத்து விடக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More