தவறான சிகிச்சையால் வாலிபர் இறந்ததாக மருத்துவமனையை உறவினர்கள் சூறை: காவல் நிலையத்தை முற்றுகை

பெரம்பூர்: ஓட்டேரி சாலைமா நகரை சேர்ந்தவர் குமார் (39). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். குமாருக்கு நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், உறவிர்கள் அவரை மீட்டு, ஓட்டேரி பிரிக்கிளின் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது.சிறிது நேரத்தில் குமாருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். அதன்பேரில், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்று, அங்கிருந்த மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் இருந்த கண்ணாடி மற்றும் கார்களை அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உயிரிழந்த குமாரின் உறவினர்கள் நேற்று ஓட்டேரி துணை கமிஷனர் ஈஸ்வரனிடம இதுகுறித்து முறையிட்டனர். மேலும், தவறான சிகிச்சையளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் ஈஸ்வரன் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.உயிரிழந்த குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: