சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது தனியார் கம்பெனி பஸ் மோதி விபத்து: 15 ஊழியர்கள் படுகாயம்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே டிப்பர் லாரி மீது தொழிற்சாலை பஸ் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான ஊழியர்கள், 3 ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்கின்றனர். அனைவரும், கம்பெனி பஸ் மூலம் வீட்டில் இருந்து அழைத்து வந்து, மீண்டும் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 2வது ஷிப்ட் முடிந்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 ஊழியர்கள் பஸ் கம்பெனி மூலம் வீட்டுக்கு புறப்பட்டனர். சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுச்செட்டி சத்திரம் அருகே  பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் பயணம் செய்த ஊழியர்கள் 15 பேர் காயமடைந்தனர். இதை பார்த்ததும், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி பாலுசெட்டி சத்திரம் போலீசார் விபத்துக்கு உள்ளான தொழிற்சாலை பஸ் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More