அதிமுக நிர்வாகிகள் தேர்வை அங்கீகரிக்க கூடாது தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிய வழக்கு விசாரணைக்கு ஏற்பா? சென்னை ஐகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக தேர்தலில் தேர்வான நிர்வாகிகளை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக கட்சியின் விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி ஓசூரை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் ‘இந்த தேர்தலில் போட்டியிட எவருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. 1 கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுவதாக கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தேர்தல் முடிவுகள் மாலையில் அறிவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகிறது. எனவே இந்த வழக்கை கடைசி வழக்காக அவசரமாக விசாரிக்க வேண்டும்’ என்றார். அப்போது, உள்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு என்றும், எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை சேர்த்ததால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கட்சியில் நடந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்பதாலும், ஜனநாயகம் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் எனவும், வாக்குரிமை என்பது அரசியல் சட்ட உரிமை.

அரசியல் சாசனத்தின் ஜனநாயக உரிமையை மீறி செயல்படும்போது அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என பிசிசிஐ வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய நாள், போட்டியின்றி இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர். அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட அனுமதி என திருத்தம் செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதையடுத்து, உட்கட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை இணைத்துள்ளதால், வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

* நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பேன்; ஓபிஎஸ் பேட்டி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை மதிப்பவன் நான் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: அதிமுக கட்சி சட்டதிட்ட விதிகளின்படிதான், கட்சியின் அமைப்பு தேர்தல் முறையாக நடைபெற ஆரம்பித்துள்ளது. முதல்கட்டமாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் சட்டவிதிப்படி, தர்மத்தின்படி நடந்து முடிந்துள்ளது. அதை தொடர்ந்து அமைப்பு ரீதியான தேர்தல் அனைத்தும் நடந்து முடியும் என்றார்.

தேர்தலை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு ஏதாவது வந்தால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, பொதுவாக நீதிமன்றத்தின் ஆணையை, தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான். அதிமுக வட்டச்செயலாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து உறுப்பினர் கார்டுகளை பெற்று சென்றுள்ளனர். அந்தந்த உறுப்பினர்களிடம் அவற்றை முறையாக வழங்க வேண்டும் என்று தலைமை அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More